search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    94-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு 18 லட்சம் பேர் வாழ்த்து
    X

    94-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு 18 லட்சம் பேர் வாழ்த்து

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வருகிற 3-ந்தேதி 94-வது பிறந்த தினமாகும். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் நேற்று இரவு 11 மணி வரை சுமார் 18 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வருகிற 3-ந்தேதி 94-வது பிறந்த தினமாகும்.

    இதையொட்டி சென்னையில் அவரது பிறந்த தின விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கருணாநிதிக்கு உடல் நலம் குறைவாக இருப்பதால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்த தினத்தன்று பார்வையாளர்களை சந்தித்தால் நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

    இதையடுத்து கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    வாழ்த்து தெரிவிக்க விரும்பும் தொண்டர்கள் இணைய தளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அந்த இணைய தளத்தின் முகவரி www.wishthalaivar.com ஆகும். இந்த இணைய தளத்தை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.



    பிறகு அவர் கருணாநிதிக்கு தனது முதல் வாழ்த்து செய்தியை பதிவு செய்தார். இதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அந்த இணைய தளம் மூலம் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க தொடங்கினார்கள்.

    இணைய தளம் செயல்பாட்டுக்கு வந்த சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதிலும் இருந்து கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தன. நேற்று இரவு 11 மணி வரை சுமார் 18 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட நிறைய நாடுகளில் இருந்து கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

    வெளிநாடு வாழ் தமிழர்களில் மலேசியா தமிழர்கள்தான் அதிக அளவில் கருணாநிதிக்கு வாழ்த்து அனுப்பி உள்ளனர்.
    Next Story
    ×