search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவாதி கொலைக்கு பின்னரும் காற்றோடு பறந்த பாதுகாப்பு வாக்குறுதி
    X

    சுவாதி கொலைக்கு பின்னரும் காற்றோடு பறந்த பாதுகாப்பு வாக்குறுதி

    சென்னையை கடந்த ஆண்டு நடுநடுங்க வைத்த பெண் என்ஜினீயர் சுவாதி கொலையாகி ஓராண்டு ஆகியும் இன்னும் பல ரெயில் நிலையங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வசதி கேள்விக்குறியாகவே உள்ளது.
    சென்னை:

    இன்று பொழுது விடிந்ததும் நினைவில் வந்தவர் சுவாதிதான். கடந்த ஆண்டு இதே நாளில் சூரியன் கண் விழித்த நேரத்தில்தான் சுவாதியும் கண்மூடினார்.

    ஒரு ஆண்டு நகர்ந்து விட்டாலும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் போது ரத்தம் பெருக்கெடுத்து ஓட பிளாட்பாரத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு கிடந்த பெண் என்ஜினீயர் சுவாதியின் உடல் கண்முன் வந்து செல்கிறது.

    நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி அதிகாலை 6.30 மணிக்கு வேலைக்கு செல்ல ரெயிலுக்கு காத்திருந்த போதுதான் கொலையாளியின் கத்திக்கு இரையானார்.

    பட்டப்பகலில் இவ்வளவு கொடூரமாக பலபேர் மத்தியில் இவ்வளவு துணிச்சலாக எப்படி கொல்ல முடிந்தது? யார் அந்த கொடூரன்? என்று நாடே பரபரப்பாக எதிர்பார்த்தது.

    கொலை நடந்த மறுநாள் (ஜூன் 25) ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் வாலிபர் ஒருவர் தப்பி ஓடும் காட்சி பதிவை போலீஸ் வெளியிட்டது.


    ஜூலை 2-ந்தேதி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செப்டம்பர் 18-ந்தேதி சிறைக்குள் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில் கொலையாளியும் இறந்து விட்டதால் வழக்கும் முடிந்து போனது.

    ராம்குமார் சுவாதியை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாகவும் காதலிக்க மறுத்ததால் சுவாதியை தீர்த்து கட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    பதை பதைக்க வைத்த இந்த கொலை சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

    இதையடுத்து 52 புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களும், போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் ஆமை வேகத்திலேயே செய்யப்படுகிறது. இதுவரை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, பழவந்தாங்கல், பல்லாவரம், சானிடோரியம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, திருநின்றவூர் உள்பட 32 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    ஆனால் பல ரெயில் நிலையங்களில் இன்னும் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாகவும் எனவே ரெயில் நிலையத்துக்கு வரும் போதும், போகும் போது திக்... திக்... என்ற பயத்துடனேயே செல்ல வேண்டியிருப்பதாக பெண் பயணிகள் கூறுகின்றனர். குறிப்பாக பறக்கும் ரெயில் நிலையங்களில் போதிய மின்வசதி இல்லாததால் பயமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

    ஆனால் பெண்கள் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் கொண்ட சக்தி படை அமைக்கப்பட்டு ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    பெண் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக விளங்குவது பல ரெயில் நிலையங்களின் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகள்தான்.

    வேலைக்கு சென்று விட்டு இரவில் தனியாக ரெயிலில் வரும் பெண்கள் நடந்து செல்லும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். பொது இடத்தில் இடையூறு மற்றும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தது உள்பட 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெருங்குடி, மகேந்திரா சிட்டி பகுதிகளில் பணியாற்றும் பெண் என்ஜினீயர்கள் பலர் கூறும்போது, சுவாதி கொலை சம்பவத்துக்கு பிறகு ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டத்தில் நிற்பது, வெளியே செல்லும் போதும் பயணிகள் கூட்டத்தோடு விரைவாக ரோட்டுக்கு சென்று விடுவோம் என்றனர்.

    பல பெண் என்ஜினீயர்கள் பாதுகாப்பு செயலிகளை செல்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    இதன்படி அவர்கள் வழக்கமான பாதைக்கு பதிலாக வேறு பாதைகளில் சென்றால் உடனே அவசர கால எண்களுக்கு எச்சரிக்கை செய்யும். அதேபோல் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் செல்போனில் ஏதாவது ஒரு எண்ணை அழுத்தினாலும் அவசர கால தொடர்பு எண்களுக்கு தகவல் செல்லும்.

    இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப வாகனம் மற்றும் பாதுகாவலர் ஏற்பாடுகளை பல நிறுவனங்கள் செய்துள்ளன.

    ஆனால் ரெயில் நிலையங்களில் இன்னும் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யவில்லை என்று பெண்கள் புகார் கூறுகிறார்கள். மைலாப்பூர் - வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் மின் விளக்குகள் இல்லாத கீழ் தளங்கள், கழிவறைகள் நடந்து செல்லவே பயமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஏதாவது சம்பவங்கள் நடக்கும் போது விழித்துக் கொள்வதும், பின்னர் கண்ணை மூடிக் கொள்வதும் ரெயில்வேக்கு வாடிக்கைதான்.

    ஏற்கனவே பறக்கும் ரெயில் நிலையங்களில் கொலை, செயின் பறிப்பு, பெண்களை கேலி செய்தல் போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. ஒரு சில ரெயில் நிலையங்களில் இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் குடித்து கும்மாளமிடுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள்.

    இதை தடுப்பதற்கு போதுமான காவலர்கள் இல்லை. ரெயில் நிலையங்களும் திறந்து கிடக்கின்றன. எனவே தேவையற்ற வழிகளை மூட வேண்டும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் முழு நேர கண்காணிப்பு அவசியம் என்கிறார்கள் பயணிகள்.

    சுவாதியின் முதல் ஆண்டு நினைவிலாவது இது போன்ற சம்பவம் இதுதான் முதலும் கடைசியும் என்று உறுதி எடுத்து ரெயில்வே துறை பணியாற்ற வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர் பார்ப்பும்.
    Next Story
    ×