search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி சோதனையை தொடர்ந்து அதிரடி உத்தரவு: அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்
    X

    வருமான வரி சோதனையை தொடர்ந்து அதிரடி உத்தரவு: அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்

    வருமான வரி சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஒரே சமயத்தில் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இதில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் நிர்வாகிகள் பட்டியலுடன் சிக்கியது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்பட அமைச்சர்கள், கட்சியில் உள்ள மாநில நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த ஆவணங்களில் 4 பக்கம், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் அதே துறையில் உள்ள புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவருடைய வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன.

    அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வீடு, குடும்பத்தினருக்கு சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை தொடர்பாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, மனைவி ரம்யா, உதவியாளர் சரவணன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடந்தது. ஏற்கனவே பல முறை விசாரணைக்குள்ளன அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம், நாங்கள் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நீங்கள் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று உத்தரவாதம் அளித்தார். ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா, கல்குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கனிம வளங்கள் எடுத்தல், குட்கா-பான் மசாலா ஊழல் போன்ற புகார்கள் அடிப்படையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    அதன்படி சென்னையில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி ஆஜராக வருமான வரித்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அன்று பகல் 2.40 மணிக்கு டாக்டர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்.

    அவரிடம் தொடர்ந்து 6 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதவிர டாக்டர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார், உதவியாளர் சரவணன் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதி இருந்தது. அதன்படி அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள குவாரியும், புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். 
    Next Story
    ×