search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் கலப்பட விவகாரம்: அமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
    X

    பால் கலப்பட விவகாரம்: அமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    பால் கலப்படம் தொடர்பாக குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களில் பால் தரம் குறைந்து என்றும் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆரோக்கியா, டோட்லா, விஜய் ஆகிய தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

    அதில், தங்கள் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர், தங்கள் நிறுவனத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் குறித்து ஆதாரம் இல்லாமல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு தடையை மீறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாகவும், தனியார் நிறுவனத்தின் பால் தரம் குறைந்தவை என்று மீண்டும் மீண்டும் அவரது வக்கீல், ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருவதாகவும் பால் நிறுவனங்களின் வழக்கறிஞர் வாதம் செய்தார்.

    இதுபற்றிய ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஒருவேளை ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக தெரிந்தால், யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    இன்றும் மனுதாரர் தரப்பு வாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, தனியார் பாலில் கலப்படும் என பொதுவாக குற்றம் சாட்டியதால் வணிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொது இடத்தில் பேசினால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் என்றும் பால் நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம் நடைபெற உள்ளது. இதற்காக விசாரணை நாளை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×