என் மலர்
செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ். சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ் வியாசை எம்.மணி, மாநில துணை தலைவர்கள் ஆலந்தூர் கணேசன், நிர்வாகிகள் துரைமாணிக்கம், பரமசிவம், கதிரேசன், விநாயகம், கமலநாதன், வடபழனி குமரேசன், சந்தானம், சி.லட்சுமணன், ஜி.தங்கராஜ், அன்வர்பாசா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவி அனிதா சாவுக்கு நீதி கோரி கண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள முழங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். ஏழை, மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த மாணவி அனிதா மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும். நீட் தேர்வால் வட மாநிலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தான் அதிகம் பயன் பெற போகிறார்கள்.. ஒரே இந்தியா, ஒரே கல்வி என்ற பிரதமர் மோடியின் கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழக மாணவ-மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அனைத்து துறைகளும் சீரழிந்து வருகிறது. விவசாயம், வணிகம் அழிந்து வருகிறது. மாணவி அனிதா நீட் தேர்வுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். மாணவர்களின எதிர்காலத்தை பாதுகாக்க உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.