search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்
    X

    திருப்பூரில் திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்

    திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு தொழிற் பயிற்சிக்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி வழங்கினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி தொழிற்பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி பேசினார்.

    திருநங்கைகள் மற்றவர்களுக்கு இனையாக பொருளாதரத்தில் முன்னேற்றம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அதன் அடிப்படையில் சுயமாக வருமானத்தை தேடிக் கொள்கின்ற வகையில் தொழிற்பயிற்சி மற்றும் வங்கி கடன் வழங்க மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதற்கேற்ப திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் பின்னர் ஒவ்வொருவரின் திறமைகேற்ப தொழிற்பயிற்சி வழங்க திட்டமிட்டு கனரா வங்கி மற்றும் மாவட்ட மகளிர் திட்டத்துறையுடன் ஒருங்கிணைந்து தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.

    தற்போது 20 பேர் கொண்ட குழுவிற்கு கனரா வங்கி உதவியுடன் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பினாயில் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் 10 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த குழுவினருக்கு மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுயதொழில் அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

    மேலும் தமிழக அரசு திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் பழனிசாமி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல், மாவட்ட சமூகநல அலுவலர் பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×