என் மலர்
செய்திகள்
பராமரிப்பு பணி: பூங்கா, கோட்டை, கடற்கரை 3 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன
சென்னை:
சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பவை மின்சார ரெயில்களே. பஸ்களில் பயணம் செய்யும் போது நாம் செல்லும் இடங்களுக்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியது உள்ளது.
அதே நேரத்தில் ரெயில் பயணத்திலோ நேரம் மிச்சமாவதுடன் கட்டணமும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே பலர் மின்சார ரெயிலில் பயணிப்பதை விரும்புகிறார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு பின்னர் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே மின்சார ரெயில்களில் எப்போதும் இல்லாத வகையில் பயணிகள் கூட்டம் அதிக மாகவே உள்ளது.
இந்த நிலையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் வழித்தடத்தில் 3 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பூங்கா, கோட்டை, கடற்கரை ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கு இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கும் தினமும் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் லட்சக் கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.
எழும்பூரில் இருந்து கடற்கரை ரெயில் நிலையத்துக் குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து மின்சார ரெயில்களும் எழும்பூரில் இருந்தே இயக்கப்பட்டன. செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்களும் எழும்பூருடன் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக இன்று காலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் இருந்து மின்சார ரெயிலில் தாம்பரம் பகுதிகளுக்கு சென்றவர்கள் பஸ்சில் எழும்பூர் வந்து அங்கிருந்தே சென்றனர். எழும்பூர் ரெயில் நிலையமே கடைசி நிறுத்தம் என்பதால் அனைத்து பயணிகளும் எழும்பூரிலேயே இறங்கினர். இதனால் இன்று காலை 7.30 மணி அளவில் எழும்பூரில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறியவர்களும், ரெயில் நிலையத்துக்கு சென்றவர்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் மின்சார ரெயில் நடைமேடையையொட்டியுள்ள படிக்கட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். இதனால் படிக்கட்டு வழியாக அனைவராலும் செல்ல முடியவில்லை. பயணிகள் பலர் மூட்டை களுடனும், தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டும் தண்டவாளம் வழியாக நடந்து சென்று வெளியேறினார்கள்.
ரெயில் நிலையத்தில் உள்ள 4 டிக்கெட் கவுண்டர்களில் 2 மட்டுமே செயல்பட் டது. 2 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் ஒன்று மட்டுமே செயல்பட்டது. இதுபோன்ற சூழலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் தவித்தனர். 30 நிமிடங்கள் வரை காத்திருந்தே டிக்கெட் எடுத்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பயணிகளை ஒழுங்குபடுத்தி நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டனர்.
பராமரிப்பு காரணமாக இன்று எழும்பூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே மின்சார ரெயில் இயக்கப்படும் என்கிற அறிவிப்பு நேற்றில் இருந்தே வெளியாகிக் கொண்டிருந்தது.
அனைத்து மின்சார ரெயில் நிலையங்களிலும் இந்த அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது. இருப்பினும் இது தெரியாமல் எழும்பூர் ரெயில் நிலையம் வந்த பின்னரும் பயணிகள் பலர் கடற்கரை வரை ரெயில் செல்லும் என்று நினைத்து ரெயிலிலேயே காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.