search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க. ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி
    X

    மு.க. ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் ஒருவாரமாக நடத்திவரும் தனது உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னரிடன் அனுமதி கேட்டனர்.

    ஆனால், இதற்கு கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியை சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டார்.


    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களை டெல்லி கவர்னர் இப்படி மதிப்பற்ற முறையில் நடத்துவது சரியல்ல. இந்த நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க. அழிக்க முயல்கிறது. மாநில உரிமைகளுக்காக போராடும் முதல் மந்திரிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.


    இந்த ஆதரவுக்காக ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மக்களை அவர்கள் நீண்டகாலமாக கேவலப்படுத்தி வருவதாகவும், டெல்லி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். #kejriwal #MKStalin
    Next Story
    ×