என் மலர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க இயக்குனர் கொலை- 3 பேர் கைது
Byமாலை மலர்4 April 2019 8:37 PM IST (Updated: 4 April 2019 8:37 PM IST)
மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க இயக்குனர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 47). பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முத்து சேர்வாமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குனராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி சுந்தரி(42). இவர்களுக்கு ஒரு மகளும், ஜீவகன், கதிரவன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை இளையபெருமாள் நல்லூர் கிராமத்துக்கு சென்ற, ஜீவகன் தனது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு, மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மொபட் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.
இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ரெட்டிபாளையம் காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன்(25), துரைராஜ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சவுந்திரபாண்டியனின் வீட்டுக்கு சென்றனர். அவருடன் மணிகண்டனின் தம்பி குமாரும்(23) சென்றார். அங்கு அவர்கள், சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது, அவர்கள் முன்விரோதம் காரணமாக, சவுந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், மணிகண்டன், துரைராஜ், குமார் ஆகியோர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலைச்சாமி கொலை வழக்கு பதிவு செய்தார். பின்னர் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
X