search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    டாஸ்மாக் மதுக்கடைகளில் ‘கிரில்கேட்’ உடனடியாக அமைக்க அதிகாரி உத்தரவு

    சமூக விரோதிகள் உள்ளே புகுவதை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளில் ‘கிரில்கேட்’ உடனடியாக அமைக்க வேண்டும் என்று அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    அரசு டாஸ்மாக் கடைகளில் சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே புகுந்து ஊழியர்களை தாக்குவதும், பணம் மற்றும் மதுபாட்டில்களை எடுத்து செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர் ராஜா என்பவரை தாக்கியதில் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

    ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், விற்பனையாகும் பணத்தை நிர்வாகமே நேரில் வந்து பெற்றுச்செல்ல வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் தலைமை அலுவலகம் உள்ள எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனால் ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று தாமதமாக திறக்கப்பட்டன. 12 மணிக்கு திறக்க வேண்டிய கடைகள் ஊழியர்கள் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டு இருந்தது.

    தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம். மாநில தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    இதனை ஏற்று டாஸ்மாக் நிறுவனம் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டது. அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடை மேற்பார்வையாளர்கள், கூடுதல் மேற்பார்வையாளர்கள், மதியம் 12 மணிக்கு கடைகளை திறக்கும்போதும், இரவு 10 மணிக்கு மூடும் போதும் கண்டிப்பாக கடைகளில் இருக்க வேண்டும். கடை சாவி மேற்பார்வையாளர்கள் வசம் இருக்க வேண்டும்.ஒவ்வொரு கடையிலும் இரண்டு, மூன்று ஊழியர்கள் இருக்க வேண்டும்.

    அதிகம் விற்பனையாகும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்பார்வையாளர் மற்றும் கூடுதல் மேற்பார்வையாளர்கள் அவசியம் பணியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    வசூல் பணத்தை இரும்பு பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல் மேஜையில் வைப்பது, அட்டை பெட்டியில் வைப்பது, வீட்டிற்கு எடுத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

    வெளிநபர்கள் அத்துமீறி கடைக்குள் நுழைவதை தடுக்கவும், ஊழியர்கள், மது வகைகள், பணத்தை பாதுகாக்கவும் அனைத்து மதுக்கடைகளிலும் ‘கிரில்’ கேட் அமைக்க வேண்டும். அந்த கேட் எப்போதும் கடையின் உட்புறமாக பூட்டப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடைகளுக்குள் யாரும் நுழையாதபடி பாதுகாக்க முடியும்.

    இந்த அறிவுரைகளை மாவட்ட மேலாளர்கள் கடை ஊழியர்களுக்கு எடுத்துரைத்து தவறாது பின்பற்றுமாறும், அவற்றை உடனடியாக அமல்படுத்து மாறும் கேட்டுகொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×