என் மலர்
செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க-தி.மு.க.வில் தொகுதி பங்கீடு தீவிரம்
சென்னை:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
நேற்று முன்தினம் வரை குறைந்த அளவில்தான் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 763 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதனால் கடந்த 5 நாட்களில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிகபட்சமாக 75 ஆயிரத்து 170 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த படியாக கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டுமே மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது. இதனால் இன்றும், திங்கட்கிழமையும் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் முறையாக பெறப்படுகின்றனவா? என்று ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கும் கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கும் கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்படுகிறது.
கட்சி சார்பில் தேர்வு செய்யப்படும் பதவி இடங்களை பிரித்துக் கொள்ள அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் சமீபத்தில் தொகுதி பங்கீடு செய்து முடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இன்று அல்லது நாளை வேட்பாளர்கள் விவரங்களை அறிவிக்க உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் சில இடங்களுக்கு மட்டும் தொகுதி பங்கீடு செய்யப்பட உள்ளது. அதற்கான முடிவுகள் இன்று எடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் கடந்த சில தினங்களாக நடந்தன. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளே தொகுதிகளை பிரித்துக் கொள்ள தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரு கின்றன.
இன்று மாலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் வேட்பாளர்களை இன்று அல்லது நாளை அறிவிக்க உள்ளன.
திங்கட்கிழமை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் முழுமையாக தெரிந்து விடும். அதன்பிறகு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் எத்தகைய போட்டி ஏற்பட்டுள்ளது என்பது 27 மாவட்டங்களிலும் தெரிய வரும்.
மனுதாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும். அதன்பிறகு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 2 நாட்கள் அவகாசம் உள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த வார இறுதியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் முழுமையாக தெரிந்து விடும். அதன்பிறகு விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடைபெறும். தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்தவார இறுதியில் இருந்து 10 நாட்களுக்கு அனல்பறக்கும் வகையில் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டுவார்கள்.
இதற்கிடையே ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது.
ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இப்போது கையிருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் எத்தனை உள்ளன? என்பதை கண்டறிந்து பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை ஓட்டு எண்ணும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்ல உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.