என் மலர்
செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்கு
கொரோனா தொற்றுக்கு பலியான டாக்டரின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆம்புலன்சில் ஏற்றி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். கொரோனாவுக்கு பலியான டாக்டரின் உடலை இங்கு அடக்கம் செய்ய கூடாது என கூறி சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாகவும் பேசினார்கள்.
சுமார் 30 நிமிடத்துக்கு மேல் போராட்டம் நடத்திய அவர்களை கட்டுப்படுத்த முடியாததாத காரணத்தாலே ஆம்புலன்ஸ் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா நகர் கல்லறை தோட்டத்துக்கு சென்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக டி.பி. சத்திரம் போலீசார் 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல், நோய் தொற்று பரவும் என்ற தெரிந்தே அலட்சியமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் 90 மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்ணா நகர் போலீசாரும் ஆம்புலன்சை தாக்கியவர்கள் மீது தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு பெண் உள்பட 21 பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதலில் ஈடுபடுதல், அவதூறாக பேசுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.