search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய நவீன பாலகம் கட்டுவதற்காக பூமி பூஜை விழாவை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
    X
    புதிய நவீன பாலகம் கட்டுவதற்காக பூமி பூஜை விழாவை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

    நவீனமுறையில் பால் குளிரூட்டும் மையம் கட்டும் பணி- அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

    காரைக்குடியில் நவீனமுறையில் பால் குளிரூட்டும் மையம் கட்டும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    காரைக்குடி:

    காரைக்குடி ஆவின் நிர்வாகம் சார்பில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நவீன பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு புதிய பால் குளிர்விக்கும் மையம் மற்றும் நவீன பாலகம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆவின் நிர்வாகம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த துறை மூலம் காரைக்குடியில் நாள்தோறும் 50 ஆயிரம் லிட்டர் பால் பதனிடும் தொழிற்சாலையும், சிவகங்கையில் 10 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன் உடைய பால் குளிரூட்டும் நிலையம் என இரு இடங்களிலும் சேர்த்து 11 இடங்களில் நாள் ஒன்றிக்கு 5 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன் உடைய பால் குளிரூட்டும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 73 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து நவீனமுறையில் பதப்படுத்தி பால் நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்து வருவதுடன் எஞ்சிய பாலானது பால் உபபொருள்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

    மேலும் கோரிக்கையை ஏற்று சக்கந்தி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளாகத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பால் உபபொருட்கள் மாற்றம் செய்வதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 26 கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படும். இதனால் 780 பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவதுடன் பால் உபபொருட்கள் தயாரிக்கவும் இந்த மையம் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதை தொடர்ந்து காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி அருகே ஆவின் நிர்வாகம் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நவீன பாலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆவின் நிர்வாக பொது மேலாளர் காமராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை குழு தலைவர் சந்திரன், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்க தலைவர் நாகராஜன், காரைக்குடி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் போஸ், அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×