என் மலர்
செய்திகள்
X
மேல்மலையனூர் அருகே தலையை துண்டித்து தொழிலாளி கொடூர கொலை
Byமாலை மலர்23 July 2020 2:38 PM IST (Updated: 23 July 2020 2:38 PM IST)
மேல்மலையனூர் அருகே நடுரோட்டில் தலையை துண்டித்து தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பாப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள சாலையில் நேற்று மாலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த நபரின் தலை மட்டும் சாலையோரம் தனியாக கிடந்தது. மேலும் மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, சீதாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகசெஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நடுரோட்டில் கிடந்த உடலையும், சாலையோரம் வீசப்பட்டிருந்த தலையையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தலை துண்டிக்கப்பட்டு கிடந்தவர் அருள்நாடு கிராமத்தை சேர்ந்த தேவ இரக்கம் மகன் பால் ஞானதாசன் (வயது 40) என்பதும், படுகாயமடைந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த ஜான்சத்தியசீலன்(46) என்பதும், இவர்கள் இருவரும் நேற்று காலை பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தியின் விளை நிலத்துக்கு கூலி வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றதும், மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது மர்மகும்பல் வழிமறித்து ஜான்சத்தியசீலனை தாக்கி விட்டு, பால் ஞானதாசனை தலையை துண்டித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜான்சத்தியசீலன் சுயநினைவின்றி உள்ளார். இதனால் அவரை தாக்கி விட்டு பால்ஞானதாசனை தலையை துண்டித்து கொலை செய்தது யார்? என்பது குறித்த விவரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ஞானதாசனை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளியின் தலையை துண்டித்து உடலை நடுரோட்டில் வீசிச்சென்ற சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
X