search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்கும் போரை திமுக தொடங்கியுள்ளது- முக ஸ்டாலின்

    ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான போரை திமுக தொடங்கியுள்ளது என்று புதுக்கோட்டை கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் காணொலி காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலையையும் அவர் திறந்துவைத்தார். கூட்டத்தில், அவர் பேசியதாவது:-

    2011-ம் ஆண்டில் இருந்து வேதனையைத்தான் பார்த்து வருகிறது தமிழகம். எந்த துறையாக இருந்தாலும் அதில் இருந்து சொல்வதற்கு எந்த சாதனையும் இல்லாமல், வேதனையையே பரிசாக அளித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. திரும்பிய பக்கம் எல்லாம் அராஜகம். தொட்டது எல்லாம் ஊழல். எல்லாவற்றிலும் அலட்சியம். மொத்தத்தில் இது ஆட்சியே அல்ல என்று சொல்லும் அளவுக்குத்தான் அ.தி.மு.க. ஆட்சியானது கடந்த 10 ஆண்டு காலத்தில் இருந்துவந்துள்ளது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தாலும், பன்னீர்செல்வம் தற்காலிக முதல்-அமைச்சராக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர்ந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி என்பது மக்கள்விரோத, ஜனநாயக விரோத ஊழலும், அராஜகமும் கொண்ட ஆட்சியாகத்தான் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துவந்துள்ளது.

    குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. விஜயபாஸ்கர் சி.பி.ஐ.யில் ஆஜரானார். இந்த வழக்கு இன்னமும் சி.பி.ஐ.யில் நிலுவையில் தான் இருக்கிறது. மத்திய அரசின் தயவு இல்லாமல் இருக்குமானால் விஜயபாஸ்கரை எப்போதோ கைது செய்திருப்பார்கள். அவர் இன்று அமைச்சராக இருப்பதற்கும், வெளியில் இருப்பதற்கும் காரணம் மத்திய பா.ஜ.க. அரசுதான். அதனால்தான் மத்திய அரசு எதைச் சொன்னாலும் தலையாட்டிக்கொண்டு இருக்கிறது அ.தி.மு.க. அரசு.

    இதைவிட பா.ஜ.க. அரசுக்கு இந்த அ.தி.மு.க. அரசு பயப்பட இன்னொரு காரணம் ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு. இதிலும் சம்பந்தப்பட்டவர் விஜயபாஸ்கர்தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்தார்கள். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இப்படி குற்றம் சாட்டியது நான் அல்ல, மத்திய வருமான வரித்துறைதான் இப்படி குற்றம் சாட்டியது. இந்த வழக்கும் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது.

    கொரோனாவை வைத்து அடித்த கொள்ளைகள், குட்கா லஞ்சங்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா, வருமான வரித்துறையின் புகார்கள் என்று விஜயபாஸ்கரின் ‘கிரைம் ரேட்’ எகிறிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு அமைச்சரைப் பற்றித்தான் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி என்று வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தால் பல மணி நேரம் ஆகும்.

    தி.மு.க.வின் சாதனை பட்டியல் ஒரு பக்கம் மலையளவு இருக்கிறது என்றால்; அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியல் இன்னொரு பக்கம் மலையளவு குவிந்து இருக்கிறது. இந்த ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்பதுதான், நாம் தொடங்கியுள்ள போர். இந்த ஊழல்வாதிகளுக்கு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பாதுகாப்பை அளித்து வருகிறது. பா.ஜ.க. அரசுக்கு அடிமையாக இருக்க அ.தி.மு.க. அரசு தயாராக இருப்பதால் மத்திய அரசு இவர்களைப் பாதுகாக்கிறது.

    அ.தி.மு.க. என்ற கட்சியையும், தமிழக ஆட்சியையும் பா.ஜ.க.வுக்கு அடிமையாக கொண்டுபோய் வைத்துவிட்டார்கள். அதற்கு பரிகாரமாக தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு பா.ஜ.க. அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளையர் ஆட்சி காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்துக்கொண்டு இருந்ததைப்போல, மத்திய பா.ஜ.க. அரசுக்கு கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க.வினர் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை வீழ்த்தும் கடமை தி.மு.க. தீரர்களுக்கு உண்டு. இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை என்பதைப் போல, அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்தை விரட்டுவோம். கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டை கூட்டத்தில் சபதம் எடுப்போம். தேர்தலுக்கு பிறகு சென்னை கோட்டையை புதிய கோட்டையாக மாற்றிக்காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×