என் மலர்
செய்திகள்

X
அரசுப் பேருந்து
ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு தொடங்கியது
By
மாலை மலர்11 Dec 2020 10:09 AM IST (Updated: 11 Dec 2020 11:15 AM IST)

அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது
சென்னை:
பொங்கல் பண்டிகை விடுமுறை ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் வருகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பஸ், ரெயில்களில் முன் பதிவு செய்து வருகிறார்கள்.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. ஒருசில சிறப்பு ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் காலியாக உள்ளன. ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் அனுமதிக்கப்படாததால் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
முற்றிலும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே தற்போது பயணம் செய்து வருகிறார்கள். பொதுவாக கடைசி நேரத்தில் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகளில் செல்வது உண்டு.
கட்டணம் குறைவாக இருப்பதாலும், முன்பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களும் நெரிசலில் இந்த பயணத்தை மேற்கொள்வார்கள். கொரோனா பாதிப்பால் முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் வினியோகிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அரசு பஸ் மட்டுமே ஏழை மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்துக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
அதன்படி பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் (ஜனவரி 12-ந் தேதி) இன்று முன்பதிவு செய்யலாம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களுக்கு முன் பதிவு தொடங்கியது.
13-ந் தேதி பயணம் செல்லக்கூடியவர்களுக்கு நாளையும், 14-ந் தேதி பயணத்துக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வழக்கம் போல் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் இருப்பதால் பொது மக்கள் அதிக அளவு பயணம் செய்ய விரும்பவில்லை. ஆனாலும் முழுமையான அளவு பயணிகளை ஏற்ற அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி கூடுதலாக பஸ்களை இயக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X