search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    500-க்கு கீழ் குறைந்து விட்டது என்று அலட்சியம் வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

    கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

    வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகள் எடுத்தன.

    தமிழ்நாட்டில் தொடக்கத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும் அரசு எடுத்த நடவடிக்கைகளால் விரைவில் கட்டுக்குள் வந்தது.

    அதே போல சில மாதங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது.

    தமிழ்நாட்டிலும் நிபந்தனைகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. திருமணம் போன்ற விசே‌ஷ நிகழ்ச்சிகள், கோவில்களில் பக்தர்கள் அனுமதி, சினிமா தியேட்டர்கள் திறப்பு, போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு குறைந்தபடியே இருக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டு இருக்கிறது.

    அதே போல கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெறுகிறது. கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும், திருமணம் போன்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அளவுக்கே நபர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்கவில்லை. பொது இடங்களில் பலர் முக கவசத்தை சரியாக அணியாமலும், சிலர் முக கவசமே அணியாமலும் செல்கிறார்கள்.

    அதே போன்று பஸ் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்பவர்களும் அஜாக்கிரையாக உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனாவின் புதிய பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. வைரஸ் பரவல் வெகுவாக குறைந்ததால் முக கவசம் அணிவது போன்றவற்றை பலரும் அலட்சியம் செய்கிறார்கள்.

    இதையடுத்து பொதுமக்கள் தொடர்ந்து கண்டிப்பாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து இருந்தாலும், தினமும் 500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவது கவலையை அளிக்கிறது.

    சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அலட்சியத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

    கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருமணம், குடும்ப விழாக்கள், பயணம் ஆகியவற்றில் விதிமுறைகளை நிச்சயமாக கடைபிடியுங்கள். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தற்போது 400-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வருகிற 7-ந்தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், நிதித்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×