search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தமிழகத்தில் கடந்த 45 நாட்களில் 4 லட்சம் பேருக்கு கொரோனா...உயிரிழப்பும் அதிக அளவில் உயர்வு

    கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஏப்ரல், மே மாதங்களில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு இருந்தது. பின்னர் படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்தது.

    இதையடுத்து தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி ஊரடங்கு தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 20-ந் தேதி கொரோனா தினசரி பாதிப்பு 1,243 ஆக இருந்தது. அன்று 8 பேர் உயிரிழந்து இருந்தனர்.

    அப்போது தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 590 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். கொரோனா பாதிப்பால் 7,291 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதன்பிறகு கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர தொடங்கியது. மார்ச் 30-ந் தேதி தினசரி பாதிப்பு 2,500ஐ நெருங்கி இருந்தது. அன்றைய தினம் 2,332 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மொத்த பாதிப்பு 8 லட்சத்து 34 ஆயிரத்து 904 ஆக இருந்தது.

    கோப்புபடம்

    அன்று 16 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் 12,700 பேர் பலியாகி இருந்தனர்.

    ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் மளமளவென உயர்ந்தது. கடந்த 2 வாரங்களில் தினசரி பாதிப்பு பலமடங்கு அதிகரித்தது. ஏப்ரல் 14-ந் தேதி அன்று 7,819 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

    சென்னையில் மட்டும் அன்று 2,564 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 30-ந் தேதி தமிழகம் முழுவதுமே மொத்த பாதிப்பு 2,332 ஆகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படி ஒருநாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றதால் தினசரி பாதிப்பு அடுத்த சில நாட்களுக்குள் 10 ஆயிரத்தை எட்டியது. இது மேலும் உயர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் 20 ஆயிரத்தை நெருங்கியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 5-ந் தேதி) கொரோனாவால் 23,310 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த பாதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மே 5-ந் தேதி புள்ளி விவரப்படி தமிழகத்தில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 14 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

    கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் 14 ஆயிரத்து 846 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்துள்ளது.

    தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தொட்டுள்ளது.

    கடந்த 45 நாட்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 2,193 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    இப்படி கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×