என் மலர்
செய்திகள்
X
100 சதவீத பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கின
Byமாலை மலர்28 Jun 2021 3:02 PM IST (Updated: 28 Jun 2021 3:02 PM IST)
உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்வில் திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் இன்று முதல் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன. இது உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கிய நிலையில் சொந்த மாநிலங்களுக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளூரில் உள்ள தொழிலாளர்கள் மூலம் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
வெளி மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் திருப்பூர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மோட்டார் சைக்கிள்கள் மூலம் நேற்றே திருப்பூர் வந்தனர். அவர்கள் இன்று முதல் பணியில் ஈடுபட்டனர். மற்ற தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை பனியன் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அடுத்த வாரம் திருப்பூரிலும் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதால் ஆடை உற்பத்தி பணிகள் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பனியன் நிறுவனங்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருப்பூரில் இயங்கிவரும் பனியன் நிறுவனங்களுக்கு சென்று தடுப்பு வழிமுறைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பல்லடத்தில் லட்சக்கணக்கான விசைத்தறி கூடங்கள் உள்ளன. ஊரடங்கில் அனுமதி அளிக்கப்படாததால் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இன்று முதல் விசைத்தறி கூடங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன.
Next Story
×
X