என் மலர்
செய்திகள்
X
பராமரிப்பு பணியால் மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை-அதிகாரிகள் தகவல்
Byமாலை மலர்29 Jun 2021 1:12 PM IST (Updated: 29 Jun 2021 1:12 PM IST)
உடுமலை கோட்டத்தில் துணை மின் நிலையம் வாரியாக முன்னதாக மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
உடுமலை:
மின் வழித்தடங்களில் மின்தடை ஏற்படுத்தும் வகையிலுள்ள மரங்களின் கிளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் மின்வழித்தடங்கள் அமைந்துள்ள விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் மரக்கிளைகள் உள்ளன.மாதம் ஒருமுறை மின்தடை அறிவிக்கும் போது அகற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது காற்று காலம் துவங்கியுள்ளதால் மின்கம்பிகள் மீது விழும் மரக்கிளைகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மின் வினியோகத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் மின்வெட்டு ஏற்படுவதை தடுக்கும் வகையில் துணை மின்நிலையங்கள், மின் வழித்தடங்கள், மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் பராமரிப்பு என மெகா பராமரிப்பு பணிகளை கடந்த 19-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்களில் சீரமைக்க மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் உடுமலை மின் பகிர்மான வட்டம் உடுமலை கோட்டத்தில் துணை மின் நிலையம் வாரியாக முன்னதாக மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது-.
இப்பணியில் மின் வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டனர். தென்னந்தோப்புகள், மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மின் வழித்தடங்களில் மின் கம்பிகளை உரசும் வகையில் இருந்த 10 ஆயிரத்து 336 மரங்களின் கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டு மின்வழித்தடம் சீரமைக்கப்பட்டது.
மேலும் பழுதடைந்திருந்த, சாய்ந்திருந்த 39 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. மின் கம்பங்களுக்கான ஸ்டே கம்பிகள், கம்பங்கள் 28 மாற்றப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில்:-
மின் வினியோகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.அதன் அடிப்படையில் 10 நாட்களாக தொடர் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் தடையில்லா மின் வினியோகம் உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிமேல் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.
Next Story
×
X