என் மலர்
உள்ளூர் செய்திகள்
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு- விழா ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்து உருவாக்கியுள்ள உங்களில் ஒருவன் என்ற வாழ்க்கை பயண புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா நாளை (28-ந் தேதி) மதியம் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடை பெறுகிறது.
விழாவுக்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதில் கேரள முதல்-மந்திரி பினராய்விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
இதேபோல் நடிகர் ரஜினி காந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சரத்குமார், சிவகுமார், சத்யராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோருக்கும் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
இது தவிர அரசியல் கட்சி பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கட்சி பிரமுகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் சென்றுள்ளது.
இந்த விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
விழா நடைபெறும் அரங்கம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கிண்டி கத்திப்பாராவில் இருந்து பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதையொட்டி காஞ்சி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரளாக வரும் படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார். வழிநெடுக ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள் திரளாக நின்று வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.