என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீட் விலக்கு மசோதா ஒருமாதம் ஆகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரை, தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் முதலில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காவது அதிகபட்சமாக ஒரு வாரம் தேவைப்படும். இப்போது அதே சட்ட முன்வரைவு தான் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதால், அதில் ஆய்வு செய்யவோ, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கவோ எதுவும் இல்லை.
ஒரு சட்ட முன்வரைவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. அதனால், தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு கண்களை மூடிக் கொண்டு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடுவது தான் ஆளுனருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஆகும்.
ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு சட்ட முன்வரைவு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டால், அது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொள்ள ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இதை உணர்ந்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீட் தேர்வு மாணவர்கொல்லி தேர்வு என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
கடந்த இரு ஆண்டுகளாக, நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் ஒவ்வொரு ஆண்டும் 10 பேருக்கும் மேலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஆண்டும் நீட் தற்கொலைகள் தொடர் கதையாகிவிடக்கூடாது.
அதனால், தமிழக ஆளுனர் உடனடியாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆளுனரை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து, இதற்காக வலியுறுத்த வேண்டும்.
அதன்பின் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். வரும் கல்வியாவிண்டுக்கு முன்பாக தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை வாலிபர்- உளவுத்துறை விசாரணை