என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பஞ்சாயத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்தான சிற்றுண்டி
Byமாலை மலர்8 March 2022 3:21 PM IST (Updated: 8 March 2022 3:21 PM IST)
புதுக்கோட்டை அருகே பஞ்சாயத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் உதவியால் சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்கு ஆவனத்தான்கோட்டையில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 2019&ல் இந்த பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 73 ஆக இருந்தது. பின்னர் 2020 மார்ச்சில் வந்த கொரோனா வைரசால் மக்கள் வாழ்வாதாரம் இழந்ததன் விளைவாக இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கை 3 மடங்கு உயர்ந்தது. தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை வாங்கி அரசு பள்ளியில் சேர்த்தனர்.
தற்போதைய நிலையில் இந்த பள்ளியில் 231 மாணவ&மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் இருவரும் காலையிலேயே வேலைக்கு செல்கின்றனர்.
இதனால் இந்த குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி எட்டாக்கனியானது. ஆகவே அவர்கள் சிற்றுண்டியை தவிர்த்து வந்தனர்.
இதனை அறிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளம் படைத்த சிலர் சேர்ந்து அந்த மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பிஞ்சு குழந்தைகளுக்கு சத்தான சிற்றுண்டி வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கூடத்தில் வழங்கப்படுகிறது.
இந்த தொகையினை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தற்போது சிற்றுண்டி மெனு நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பட்டியலில் கேப்பை கூழ், கம்பங்கூழ், பாசி பயிறு பாயாசம், கொண்டைக்கடலை சுண்டல், பொரித்த சிக்கன் துண்டுகள், சத்துமாவு கொழுக்கட்டை, தினைமாவு கொழுக்கட்டை, உளுந்தங்கஞ்சி, பட்டாணி சுண்டல் போன்ற விட்டமின் மற்றும் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
நன்கொடையாளர் பாஸ்கரன் என்பவர் கூறும்போது, சத்தான உணவு சாப்பிட்டால் குழந்தைகள் ஆராக்கியமாகவும், வகுப்பில் கவனமுடனும் படிக்க இயலும். வாரத்தில் 5 நாட்களும் சிற்றுண்டி வழங்க முயற்சி செய்து வருகிறோம். இல்லாதார்க்கு உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.
Next Story
×
X