என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு மனைவியை அடித்து விரட்டிய கணவர்
Byமாலை மலர்8 March 2022 4:44 PM IST
தருமபுரி மாவட்டத்தில் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு 2 குழந்தைகளுடன் மனைவியை அடித்து வீட்டுக்கு விரட்டிய கணவர்.
தருமபுரி:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியன அள்ளி பகுதியை சேர்ந்த செவ்வந்தி (வயது21). தனது கணவர் ராமு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நேற்று மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியன அள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமு என்பவருக்கும், திருமணம் நடந்து முடிந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
என் கணவர் கேரள மாநிலத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். எனது கணவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் எனது பெற்றோர்கள் 25 பவுன் தங்க நகை கொடுத்தார்கள். மேலும் எங்களது வீட்டில் இருந்து பணமாக 3 லட்சம் கொடுத்தார்கள். அதுவும் போதவில்லை என்று அடிக்கடி எனது மாமியார் ராமாக்காள், மாமனார் கோழி ராமன், எனது கணவரின் சகோதரர் சாமிக்கண்ணு, அவரது மனைவி சாமந்தி, மற்றொரு சகோதரர் வெங்கடேசன், ஆகியோர் எனது கணவரின் சகோதரி சரஸ்வதி எனது கணவர் ராமு ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கொடுக்கவில்லை என்று கூறி என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். 10 முறைக்கு மேல் ஊர் பெரியவர்கள் உறவினர்களும் என் கணவரிடம் பேசி குடும்பம் நடத்த வைத்தார்கள்.
கடந்த 8 மாதத்திற்கு முன்பு அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி பணம் ரூ.10 லட்சம் கேட்டு எனது வீட்டிற்கு அடித்து விரட்டி விட்டார்கள். என் பெற்றோரிடம் பணம் இல்லாததால் நான் என் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தேன்.
இந்த சமயத்தில் எனது கணவர் ராமு என்பவர் அவரது குடும்ப நபர்களின் தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக மேற்படி கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்க்கை செய்து வருகிறார்.
நானும் எனது குழந்தையும் எனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறேன். இது சம்பந்தமாக அரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட கலெக்டர் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியவர்கள் மீதும் முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்த என் கணவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Next Story
×
X