search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாப்பூர் கோயிலில் எல்.இ.டி.திரை-அமைச்சர் சேகர் பாபு
    X
    மயிலாப்பூர் கோயிலில் எல்.இ.டி.திரை-அமைச்சர் சேகர் பாபு

    கபாலீசுவரர் கோயிலில் காணாமல் போன மயில் சிலையை கண்டு பிடிக்க குழு அமைப்பு- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    முக்கிய கோயில்களில் திருவிழா காட்சிகளை ஒளிபரப்ப எல்.இ.டி திரைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் கோயிலில் கற்பகாம்பாள் சிறிய தேர் உள்பட சுவாமி அம்பாள் வீதி உலா வரும் கோயில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக  வாகன மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த கோயில் உற்சவங்களை பக்தர்கள் கண்டு மகிழும் வகையில் ரூ.5 இலட்சம் செலவில் பெரிய LED தொலைக்காட்சி திரை வசதி அமைக்கப் பட்டுள்ளது. இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

    இந்த எல்.இ.டி. திரையில் திருக்கோயிலின் தல வரலாறு, திருவிழா காட்சிகள் மற்றும் திருக்கோயில் விளக்க காட்சிகள் தொடர்ந்து ஒலி, ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மகிழும் வண்ணம் முக்கிய கோவில்களில் அடுத்தடுத்து இது போன்று எல்.இ.டி திரை ஏற்படுத்தப்படும். 

    கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன மயில் சிலையை கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நடைபெற்று வருகிறது, காவல்துறையும் விசாரணை நடத்துகிறது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    கொரோனா காலத்தில் எந்தெந்த கோயில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்ததோ அவை எல்லாம் தற்பொழுது நடைபெறுகிறது, ஓடாத தேர் எல்லாம் சரிசெய்யப்பட்டு வீதிஉலா வருகிறது, தண்ணீர் இல்லா தெப்பக்குளங்கள் எல்லாம் தண்ணீர் நிரப்பி சரி செய்யப்பட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    சித்திரை திருவிழா பணி முழுமையாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு வசதிகளும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×