என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தூயமல்லி நெல் விதைகள் உற்பத்தி

குடிமங்கலம்:
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அரசு விதைப்பண்ணை மூலம் தூயமல்லி நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-
நமது முன்னோர்கள் நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் தனித்தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தனர். சிறந்த அனுபவத்தின் மூலம் புதிய நெல் ரகங்களை உற்பத்தி செய்வதிலும் சிறந்தவர்களாக இருந்தனர்.
இதனால் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சூழ்நிலை, தட்ப வெப்ப நிலை, மண் வகை, நீரின் தன்மையைப் பொறுத்து நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தன. ஆனால் அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளால் பாரம்பரிய நெல் ரகங்களில் பலவும் அழிந்து விட்டன.
தற்போது பாரம்பரிய நெல் ரகங்களில் 63 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, மடுமழுங்கி, அறுபதாம் கோடை, சிவப்புக்கவுனி, ஆனைக்கொம்பன், மிளகுச்சம்பா, கருங்குறுவை, காட்டுயாணம், குழியடிச்சான், குள்ளக்கார், தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, பூங்கார் என பலவகை பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்பட்டு வந்தது. இவற்றில் பல ரகங்கள் மருத்துவ குணங்கள் அடங்கியது.
ஆனால் இவற்றில் பலவும் அழியும் நிலையில் உள்ளது. ஒரு பாரம்பரிய ரகத்தின் இழப்பானது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பின் இழப்பாகும்.
தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நமது பாரம்பரிய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய அரிசிகள் கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்று வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கும் அதற்கான விதைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், அந்த விதைகள் விவசாயிகளை சென்றடையும் நோக்கத்திலும் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் பல பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டது.
அந்த வகையில் மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணையில் 5 ஏக்கரில் தூய மல்லி எனப்படும் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடப்பட்டு 10.7 டன் மகசூல் பெறப்பட்டது. பெரும்பாலும் நவீன ரக நெல் பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகங்களாகும்.
ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவும் உயரமாக வளரக் கூடியவை. இதனால் இயற்கை உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் மாடுகளுக்கு வைக்கோல், மண்ணுக்கு தழைச்சத்து, விவசாயிகளுக்கு நெல்மணிகள் என்று பல அடுக்குகளாக பலன் தரக்கூடியதாக இருக்கும்.
தற்போது அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தூய மல்லி நெல் விதைகள் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, விதை மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்குப் பிறகு உண்மை நிலை விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.