search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை:சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்படுவதில்லை
    X

    தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை:சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்படுவதில்லை

    • சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.
    • கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் 15-வது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கி மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரத்து 615 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும் மாநில நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 2 கோடியே 48 லட்சம் நிதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், தருமபுரி-அரூர் இடையே புதிய 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

    இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால் முறையாக அமைக்கப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை.

    மேலும் சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக இந்த சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் ஆய்வு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×