என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடந்த சென்னை வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கும்பல் கைது
- கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.
- தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் அருகே கடந்த 7-ந் தேதி இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த கும்பல் பிராங்கிளினை வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று சேலம் வழியாக செல்லும் தன்பாத் ரெயிலில் சேலத்திற்கு தப்பிய கொலையாளிகள் சென்னை ரெட்கில்ஸ் வ.உ.சி. தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (28), மணலியை சேர்ந்த கார்த்தி (28) ஆகியோரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து பிராங்க்ளின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ராகுல் (வயது 22), திவாகர் (21), அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (24), புளியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வா (25), அம்மனூர் பகுதியை சேர்ந்த தர்மேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பிராங்கிளின் மற்றும் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் கவுரிசங்கர் ஆகியோர் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது. கவுரி சங்கர் சென்னையிலேயே ஜான் பிராங்ளினை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதனை அறிந்த பிராங்கிளின் சென்னையில் இருந்து தப்பி வந்து கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட கவுரி சங்கர் கூட்டாளிகளான எங்களுக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் சேர்ந்து பிராங்கிளினை வெட்டி சாய்த்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.