search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் ஓட்டலில் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கிய 6 பேர் கைது
    X

    காயம் அடைந்தவர்களை படத்தில் காணலாம்.


    கொடைக்கானல் ஓட்டலில் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கிய 6 பேர் கைது

    • ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.

    படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×