என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் 7 பவுன் தாலிசெயின் பறிப்பு
- தருமபுரியில் ஓடும் பஸ்சில் இரண்டு பெண்களிடம் 7 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
- ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம்
தருமபுரி அருகேயுள்ள சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 50). இவர் அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பளாராக பணியாற்றி வருகிறார். நேற்று சோகத்தூரில் இருந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் உறவினர் ஒருவரை காண தருமபுரி டவுன் பஸ் நிலையம் வந்துள்ளார்.
அப்போது டவுன் பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். மருத்துவனை வாசலில் இறங்கி கழுத்தில் அணிந்திருந்த இருந்த 3 பவுன் செயினை பார்த்தபோது காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த பரிமளா இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று பாப்பரபட்டி பகுதியை சேர்ந்தவர் காளியம்மள் (வயது 50). இவர் நேற்று சொந்த வேலையாக தருமபுரிக்கு வந்துள்ளார். வேலை முடிந்த பிறகு மாலை தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது சவளூர் என்ற இடத்திற்கு பஸ் வந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இது குறித்து பாப்பரப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பெண்களிடம் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் காரிமங்கலம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.