என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் விழுந்து 9 மாத ஆண் குழந்தை பலி
- பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி.
- திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
பீகாரை சோ்ந்தவர் அங்கஸ்குமார் (வயது 29). இவரது மனைவி அம்சிகுமாரி (23). இவர்களது 9 மாத ஆண் குழந்தை அசிஸ்.தம்பதி இருவரும் தங்களது குழந்தையுடன் திருப்பூர் எம்.எஸ்.நகர் அருகே செல்வலெட்சுமி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அங்கஸ்குமார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அம்சிகுமாரி சமையல் அறையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அசிஸ் விளையாடிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்சிகுமாரி குழந்தையை தேடி வெளியே ஓடிவந்த போது அங்குள்ள தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் அறையில் அம்சிகுமாரி வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை அசிஸ் தவழ்ந்து சென்று அருகில் பட்கெட்டில் இருந்த தண்ணீரில் தலைக்குப்புற விழுந்தபோது, யாரும் கவனிக்காததால் மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.