என் மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை, புதூர் தனியார் மருத்துவமனை நர்சுகள் தங்கும் விடுதியில் தீ விபத்து
- ஏசி எந்திரத்தில் இருந்து தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று பரவியது.
- ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது.
மதுரை:
மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் செட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் புகை வெளியேறிய நிலையில் அதன் மூலம் தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று அனைத்து அறைகளுக்கும் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த ஐந்து செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கி டையே தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடியில் இருந்து வானுயர எழுந்த புகையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் உடனடியாக கீழே இறங்கி வந்த செவிலியர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு நர்சிங் மாணவி மயக்கம் அடைந்ததார். பின்னா் இயல்பு நிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே தீயானது வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது. தகவல் அறிந்த மதுரை தல்லாகுளம் தீய ணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து, செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்புகையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். தீ விபத்து தொடர்பாக புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.