என் மலர்
உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் தீக்குச்சிகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
- ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
- டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விருதுநகர்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கன்சேரியில் இருந்து 6 டன் எடையுள்ள தீக்குச்்சிகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைக்கு புறப்பட்டது. லாரியை அமீது (வயது 58) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் அருகில் உள்ள மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஒன்று குறுக்கே சென்றதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது.
உடனே அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு லாரியில் சிக்கியிருந்த டிரைவர் அமீது, கிளீனரை மீட்டனர். 2 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஊரக காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து படையினர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வானகங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.