search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில்  ஆடிபெருக்கு விழா கோலாகலம்
    X

     இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடிய மக்களை படத்தில் காணலாம்.

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஆடிபெருக்கு விழா கோலாகலம்

    • ஓகேனக்கல்லில் புனிதநீராடி காவிரி கரையில் படையலிட்டு வழிபட்டனர்.
    • புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபட்டனர்.

    தருமபுரி,

    காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஏராளமான பக்தர்கள் இன்று குவிந்தனர். அங்கு அவர்கள் புனிதநீராடி காவிரி கரையில் படையலிட்டு வழிபட்டனர். மேலும் காவிரி கரையோரங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சுற்றுவட்டார பக்தர்கள் தங்களது குலதெய்வ சாமி சிலைகள், அதற்கு பயன்படுத்தும் கத்தி, ஈட்டி, காவடி மற்றும் பூஜை பொருட்களை ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு கொண்டுவந்து சுத்தம் செய்து ஆற்றில் புனித நீராடி பூஜைகள் செய்தனர்.

    பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து காவிரிக்கரையில் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்தனர். காவிரிக்கரையில் அரிசி, எள், சர்க்கரை கலந்து படைக்கப்பட்ட படையலை காவிரி தாய்க்கு அர்ப்பணித்தனர். அப்போது சுமங்கலி பெண்கள் தாலி பூஜை செய்தனர்.

    புதிதாக திருமணமான ஜோடிகள் தாலி பிரித்து கட்டி, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். தங்கள் திருமண மாலைகளை காவிரியில் விட்டு வழிபட்டனர். விவசாய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரிகளை காவிரியில் விட்டு, வழிபட்டனர். பூஜை முடிந்ததும் அனைவரும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    புதுமண தம்பதிகள் புனித நீராடி புதிய ஆடை அணிந்துகொண்டனர். சிலர் திருமணத்தின்போது அணிந்த பட்டுவேட்டி, சேலையுடன் தம்பதி சகிதமாக வந்தனர். திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர்.

    ஆற்றில் இன்றுபோல் எப்போதும் தண்ணீர் பாய்ந்தோட வேண்டும். தண்ணீர் பாய்ந்தோடுவதை போல தங்களது வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெருக வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர்.

    ஒகேனக்கல்லில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும் தயார்நிலையில் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடக்கம் முதல் அம்மன் கோவில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடிபெருக்கு அன்று அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜை நடப்பதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபட்டனர்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்க னாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள வலச கவுண்டனூர், வேப்பன பள்ளி அருகே உள்ள தீர்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன் தீர்த்தம் ஆகிய இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    அத்துடன் கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையின் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது .

    குறிப்பாக கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானேர் வந்திருந்தனர்.

    பொதுப்பணித்துறை சார்பில் அணையின் நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் பெரும் இடத்தில், சவுக்கு கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், அணையில் பொதுமக்களுக்குகுடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களையும் பொதுப்பணித் துறையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×