search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதல்: 3 பேர்  பலி
    X

    பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதல்: 3 பேர் பலி

    • வேன்- டிராக்டர் மோதி விபத்தில் பலர் காயம்
    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்

    திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் திருவண்ணாமலை கோவிலுக்கு பவுர்ணமி கிரிவலம் சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் வந்தனர். அவர்கள் பயணம் செய்த வேன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது முன்னாள் சென்ற டிராக்டரை முந்தியது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தும், வேன் முன்பக்க கண்ணாடி உடைந்தும் சேதமடைந்தது. இதில் டிராக்டர் டிரைவர் மற்றும் வேனில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வேன் சென்றது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்திற்கு எதிர் திசை நோக்கி நிறுத்தி வாகனத்தை விட்டு அதில் இருந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் காயம் அடைந்த டிராக்டர் ஓட்டுநரை பார்க்க சென்றார்.

    பின்னர் வாகனத்தின் கதவுகளை திறந்து அதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் ஏற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து டிரைவர் விபத்து சம்பவத்தை கவனிக்காமல் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகள் மீது மோதினார்.

    அதே வேகத்தில் எதிரே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியதில் சுமார் 200 மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் தூக்கி வீசப்பட்டது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பெரம்பலூர் அரணாரையைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வேனில் பயணித்த திண்டுக்கல்லை சேர்ந்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் டிராக்டரும், வேனும் மோதிய விபத்தில் காயமடைந்த திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் (வயது 42), நீலா (65), கிழவன் (45), ராமநாதபுரத்தை சேர்ந்த சாமிதாஸ் (40), சேகர் (40) ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷியாமளாதேவி மற்றும் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசாரை வரவழைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் விபத்து சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×