என் மலர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.வும்., பா.ஜ.க.வும் ஒன்றுதான்: தமிழகத்தில் அடுத்த ஆட்சி அ.தி.மு.க.வுடையது தான்- அர்ஜுன் சம்பத் பேட்டி
- உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருந்து வருகிறது.
- தமிழக்கத்தில் நிச்சயமாக அடுத்த ஆட்சியை அ.தி.மு.க.தான் அமைக்கும்.
தருமபுரி,
இந்து மக்கள் கட்சி சார்பில் 75-வது சுதந்திர இந்தியாவின் பவள விழா வையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றுவோம், சுதந்திர போராட்ட நினை விடங்களில் வீரவணக்கம் செலுத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்களை மற்றும் அவரது நினைவிடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் தருமபுரி அண்ணா சாகரத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சிவகாமி அம்மாவை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்களால் பாத பூஜை செய்து வணங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-
75-வது சுதந்திர இந்தியா பவள விழாவை பல்வேறு மாநிலங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தமிழக தமிழ்நாடு அரசு இந்த சுதந்திர இந்தியா பவள விழாவினை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றேன். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய, கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தவுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை முதலமைச்சரே ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனென்றால் அவர் மருத்துவமனையில் இருந்தாலும் கூட இங்கே வேலை நடைபெற வேண்டும் என்று தான் அவர் எண்ணுவார்.
மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கணினி உள்ளிட்டவற்றை முதலமைச்சருக்காக காத்திருக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சனையில் இரட்டை இலை மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து முடிவெடுத்து தான் எடப்பாடி பழனிசாமி என இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அ.தி.மு.க. ஒரு அங்கமாக உள்ளது. உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருந்து வருகிறது.
ஆனால் அ.தி.மு.க .கட்சி அலுவலகத்திற்கு அரசு சீல் வைத்தது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம், உட்கட்சி பூசல்களை அவர்களே சரி செய்து கொள்வார்கள். தமிழக்கத்தில் நிச்சயமாக அடுத்த ஆட்சியை அ.தி.மு.க.தான் அமைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
பாரதிய ஜனதாவும் ஆட்சி அமைக்கும், அ.தி.மு.க.வும் ஆட்சி அமைக்கும் இரண்டும் கூட்டணி தான் என தெரிவித்தார். கூட்டாட்சியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், யாராவது ஒருவர் கூட இருப்பார்கள் ஒருவர் ஆட்சி அமைப்பார்கள் இது தவறில்லை, ஆனால் கூட்டணி அரசு கிடையாது.
அ.தி.மு.க. ஆட்சி அமைத்தால் என்ன? பாஜக ஆட்சி அமைத்தால் என்ன இரண்டும் ஒன்றே தான் என தெரிவித்தார்