என் மலர்
உள்ளூர் செய்திகள்

எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கிறது: நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை- உதயநிதி

- விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
- நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன்.
கோவை:
கோவை காந்திபுரம் அருகே உள்ள பெத்தேல் கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஒட்டுமொத்த உலகமே மகிழ்ச்சியாக இருக்க கூடிய விழா என்றால் அது கிறிஸ்துமஸ் தான். கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையில் பங்கேற்று நானும் ஒரு கிறிஸ்தவன் என்றேன். உடனே அது பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.
நான் இப்போது மீண்டும் உங்களிடம் சொல்கிறேன். நானும் ஒரு கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன். முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம். இந்து என்று நினைத்தால் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். நான் எப்போதுமே அப்படி தான் இருப்பேன்.
எல்லா மதங்களின் அடிப்படை அன்பு தான். அதை தான் எல்லா மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் அதே மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புவார்கள். அவர்கள் உண்மையை பேசமாட்டார்கள்.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் வெறுப்பை பரப்புவார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை பேசினார்.
அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் கடந்த 13-ந் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவாக கையெழுத்து போட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்து போடவில்லை.
அந்த தீர்மானத்தை ஆதரிக்கும் துணிச்சல் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது.
இப்படிப்பட்ட அ.தி.மு.க.வை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புகிறார்கள். பாம்பு நிழலில் நிற்கும் தவளை போன்று தான் மக்கள் அ.தி.மு.க.வை பார்க்கிறார்கள்.
தி.மு.க.வை நீங்கள் நம்புவது தாய் மான் நிழலில் குட்டி இளைப்பாறுவது போன்றது. இது அன்பால் செய்கிற உதவி. தி.மு.க இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு இருக்கும். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கோவை தனியார் மண்டபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என கூறி வந்தனர். ஆனால் அது தி.மு.க.வின் கோட்டை என்பதை நடந்து முடிந்த தேர்தல் மூலம் நீங்கள் காட்டி உள்ளீர்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தான் முதலில் தொடங்கியுள்ளது. அனைவரும் பூத்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தி.மு.க.வின் திட்டங்கள் சென்று அடையாத வீடுகளே இல்லை. எனவே வாக்காளர்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்து எடுத்துக் கூற வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதே மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.