என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமித் ஷா 25-ந்தேதி கோவை வருகை: பா.ஜ.க. அலுவலகத்தை திறந்துவைக்கிறார்

- ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டம்.
- கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.
கோவை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாதம் கோவை வர உள்ளார். கோவை மாவட்ட பா.ஜ.க. புதிய அலுவலகம் பீளமேட்டில் கட்டப்பட்டு உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த அலுவலகம் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது.
இதன் திறப்பு விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதற்காக வருகிற 25-ந்தேதி அவர் கோவை வருகை வருகிறார். மறுநாள் (26-ந் தேதி) பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
அமித்ஷா பங்கேற்கும் கூட்டங்களில் தமிழக பா.ஜ.க. முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிய உள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.
கோவை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர, மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் பேசுகையில் கோவைக்கு வருகை தரும் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோவை விமான நிலையத்தில் ஜமாப், பஞ்சவாத்தியங்கள் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்க வேண்டும், வழிநெடுக தோரணங்களும், கட்சிக் கொடிகளும் அலங்கார வளைவுகளும் அமைத்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளையும் ஒவ்வொரு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது அமித்ஷா வருகை தொடர்பான நிகழ்ச்சிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்படும் என்றனர்.