search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடி அரசின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது வேடிக்கையாக இருக்கிறது- அண்ணாமலை
    X

    அண்ணாமலை

    மோடி அரசின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது வேடிக்கையாக இருக்கிறது- அண்ணாமலை

    • மத்திய அரசில் அங்கம் வகித்த போது நரிக்குறவர் கோரிக்கைகளை கிடப்பில் போட்டது திமுக.
    • தமிழக பாஜக, பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு சென்றது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மத்தியில் காங்கிரஸ்-திமுக ஆட்சி காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். காலம் காலமாக அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் போடப்பட்டன. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக் கூறினர்.

    பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் எஸ்.டி.பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம்மனுக்களைக் கொண்டு சென்று நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தமிழக பாஜகவால் விரைவாக மேற் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் நாற்பதாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசில் அங்கம் வகித்த போதும், கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

    அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரசை ஓட்டுவதுதான் திராவிட மாடலா? தங்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டி பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக? முதல்வரின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே நிறைவேற்றித் தந்திருக்கலாமே?

    திரவுபதி முர்மு நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு, பழங்குடியின மக்களும், நம் நாட்டின் உயர் பதவிகளில் அமர முடியும் என்பதை நமது பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம் எடுத்துரைத்தார். கீரியையும் பாம்பையும் சண்டைக்கு விட போகிறேன் என்று வித்தை காட்டி ஏமாற்றும் வித்தைக்காரனை போல விடியல் விடியல் வருகிறது வருகிறது என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் மக்களுக்குச் செய்யவில்லை. ஒருவேளை இந்த ஆட்சி முடிந்த பிறகுதான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் வரும் போலும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×