என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிவன், பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவிப்பு
- சிவன், பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்
- வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கிராமத்தில் முகாம் செய்து விசாரணை மேற்கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் உள்ளிட்ட இரு கோவில்களில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ந்தவர்கள் வழிபட முடியாத நிலையில் உள்ளது எனத் தகவல் வரப்பெற்றது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மேற்படி கிராமத்தில் முகாம் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி கோவிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் எவ்வித பாகுபாடுமின்றி சென்று வழிபட எவ்வித தடை இல்லை எனவும், இதனில் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்பதும், மேற்படி கோயிலுக்கு சென்று வழிபட எந்த சமூகத்தினருக்கும் இதுவரை தடை ஏற்படுத்தப்படவில்லை என்பதும், அனைத்து சமூகத்தினரும் சுமூகமாக வழிபட்டு வருகின்றனர் எனவும் விசாரணையில் தெரிவிய வருகிறது. எனவே, மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள மேற்படி கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் சுமூகமான முறையில் சென்று வழிபடலாம் என அறிவித்துள்ளார்.