search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில்  இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்-கலெக்டர் அறிவிப்பு
    X

    தென்காசி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்-கலெக்டர் அறிவிப்பு

    • தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
    • நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரைய வேண்டும்.

    தென்காசி:

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாகக் கொண்டு, மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் தென்காசி ஈஸ்வரன்பிள்ளை பள்ளியில் நடைபெறவுள்ளது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 14-ந்தேதி குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்). மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும்.

    அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,500, 2-ம் பரிசாக ரூ.4,500, 3-ம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படவுள்ளது.

    மேலும், முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மேலும், கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் www.artandculture.tn.gov.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் நெல்லை மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

    இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தென்காசி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×