என் மலர்
உள்ளூர் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதை போலமுதியவரை செல்போனில் மிரட்டிய வாலிபர் கைது-வரஞ்சரம் போலீசார் அதிரடி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 63). இவரது செல்போனுக்கு கடந்த 12-ந் தேதி புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர், வரஞ்சரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி, நாகேஷை உடனடியாக போலீஸ் நிலையம் வரச்சொல்லி கூறியுள்ளார்.நான் என்ன தவறு செய்தேன், எதற்கு என்னை அழைக்கிறீர்கள் என்று நாகேஷ் கேட்டுள்ளார். தொரைக்கு எல்லாத்தையும் போன்லையே சொல்லனுமா, கிளம்பி வா சொல்கிறேன் என்று எதிர்தரப்பில் பேசியவர் மிரட்டும் தோணியில் கூறினார்.இதையடுத்து நடந்த சம்பவங்களை தனது உறவினர்களிடம் நாகேஷ் கூறினார். அவர்களின் உதவியுடன் வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினர். தான் ஏதும் பேசவில்லையே, யாரோ உங்களை மிரட்டியுள்ளனர். மீண்டும் போன் வந்தால் உடனடியாக என்னிடம் வாருங்கள், அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
இதனால் நிம்மதியடைந்த நாகேஷ் தனது பணிகளை தொடர்ந்தார். மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய அதே மர்மநபர் போலீஸ் நிலையம் வரவில்லை என்றால், நேரில் வந்து முகத்தை உடைத்து விடுவேன் என்று மீண்டும் மீண்டும் மிரட்டினார்.இது தொடர்பாக வரஞ்சரம் போலீசாரிடம் நாகேஷ் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகேசை மிரட்டியவர் தியாகதுருகம் அருகே வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி மகன் தேவர் (27) என்பது தெரியவந்தது. இவருக்கும் நாகேசுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதனால் தேவர், நாகேஷை செல்போனில் மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.