என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி மாணவியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது
- பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர்.
- ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பகுதியில் வசிப்பவர் ஜெபராஜ் (வயது 39). ஆட்டோ டிரைவர்.
இவர் தினந்தோறும் காலை அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலரை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பணியாக கொண்டு இருந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரையும் அவர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் 7-ம் வகுப்பு மாணவியை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஆனால் பள்ளிக்கு அழைத்து செல்லாமல் மாணவியை தனது வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சத்தம் போட்டு அழுதுள்ளார். இதையடுத்து மாணவியை சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி பள்ளியில் கொண்டு இறக்கி விட்டுச் சென்றார்.
பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
உடனே ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் ஆட்டோடிரைவர் ஜெபராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.