என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாகல்பட்டி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகள்.
பாகல்பட்டி ஏரியில் மூட்டை மூட்டையாக டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள்

- ஏரியில் நீர் நிரம்பும் போது ஒட்டுமொத்த தண்ணீரும் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நிலத்தடி நீர் பாதிப்படைந்து நஞ்சாகும் அபாயம்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாகலஹள்ளி ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மழை காலங்களில் இந்த அனைத்து ஏரிகளும் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் கிணற்றுப் பாசனம் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் விவசாயம் செய்வதற்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் பாகல்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிக்கண்ண கவுண்டன் ஏரியில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த நபர்கள் லாரி மூலம் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை மூட்டை மூட்டையாக டன் கணக்கில் ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதிகளில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதிக்கு மேச்சலுக்கு வரும் ஆடுகள் மற்றும் மாடுகள் பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்பதால் அவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி பகுதியில் பிளாஸ்டிக் கொட்டப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கோபமடைந்த நிலையில் இரவோடு இரவாக ஏரிகரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத பழைய கிணற்றில் கொட்டியுள்ளனர்.
மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றவர் கண்களில் படாதவாறு இருப்பதற்காக குப்பைகளின் மீது களிமண்ணை கொட்டி மறைத்துள்ளனர்.
இந்த கிணறு சுமார் 40 அடி ஆழம் வரை உள்ளது. வரும் மாதங்களில் மழை பெய்து ஏரி நிரம்பும் பட்சத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள இந்த கிணறும் முழுமையாக நீர் நிரம்பும் அப்பொழுது மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கிணற்றில் இருப்பதால் ஏரியில் நீர் நிரம்பும் போது ஒட்டுமொத்த தண்ணீரும் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த ஏரியை சுற்றியுள்ள நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இப்பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனால் இந்த ஏரி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற நீர் நிலைகளை நஞ்சாக்கும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.