என் மலர்
உள்ளூர் செய்திகள்

சம்பவ இடத்தில் எஸ்.பி. தங்கதுரை மற்றும் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை

- தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி மூகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி கல்லேத்துப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சாலையில் சுந்தரேசன் (வயது65) என்பவர் வசித்து வருகிறார்.
விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை யாரும் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுந்தரேசன் வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த சுந்தரேசன் எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்து இருந்து 3 நபர்கள் கதவின் அருகே வந்து சுந்தரேசனை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனை மிரட்டினர். அப்போது அவர் சத்தம்போடவே அவரை வெட்டுவது போல் மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசும்போது சுந்தரேசனின் கையில் வெட்டியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தனது கணவரின் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மஞ்சுளாவும் அங்கு வந்தார். அப்போது இருவரையும் கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளும், மஞ்சுளா அணிந்திருந்த தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
மேலும், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு உடனே அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மற்றும் பர்கூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவன்-மனைவி இருவரும் மட்டும் தோட்டத்திற்குள் வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்டு 3 மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரேசனையும், அவரது மனைவியையும் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் காட்டுத்தீ போல்அந்த பகுதியில் பரவியதால், அவர்களது உறவினர்கள் உடனே சம்பவ நடத்த வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.