என் மலர்
உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்ததால் வாலிபரை தாக்கி பெண்ணை கடத்திய தாய்
- காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.
- சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மூக்கானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விக்னேஷ் (வயது29). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேசுக்கும் பாலக்கோடு மண்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மதுஸ்ரீ (21) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதுஸ்ரீக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதன்காரணமாக விக்னேசும், மதுஸ்ரீயும் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் பெங்களூருவில் தனியாக வசித்து வந்தனர்.
இதன்காரணமாக தனது மகள் காணவில்லை என்று அவரது தாய் கலைவாணி (45) பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கலைவாணி போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மதுஸ்ரீ தனது காதல் கணவருடன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அப்போது போலீசார் காதல்ஜோடியின் இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலைவாணி தன்னுடன் வருமாறு மதுஸ்ரீயை அழைத்தார். ஆனால், அவர் பெற்றோருடன் செல்லாமல் தனது காதல் கணவருடன் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
விக்னேசும், மதுஸ்ரீயும் காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து விக்னேஷ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் காதல் திருமணம் செய்ததால் மதுஸ்ரீயை கடத்தி சென்றதாக அவரது தாய் கலைவாணி, உறவினர்கள் சீனிவாசன் (48), கோபாலகிருஷ்ணன் (45), கீதா (47) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.