என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசுக்கு மனமில்லை- திருமாவளவன்

- பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
- தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.