search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு
    X

    மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு

    • விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.
    • ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டா் பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் கட்டபணியில் 6 அடுக்கு 'மல்டிலெவல் காா் பாா்க்கிங்', நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.

    விமான நிலைய முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம்(டிசம்பா்) இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், திறப்பு விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கும் சென்னை விமான நிலைய புதிய நவீன முனையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினாா்.

    அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதைதொடர்ந்து 2-ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

    இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×