என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஏரியூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
- தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
- 40க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர்.
தருமபுரி,
தருமபுரி, மாவட்டம், ஏரியூர் அருகில் உள்ள, தருமபுரி,- சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது.
இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.
இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் விவசாய பயிர்களையும், சேலம் மாவட்ட வார சந்தைகளுக்கு, கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
இது கடந்த 3 ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு ரூ.20 எனவும், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.40 எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புதிய டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால், கட்டுபடியாகாது என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் போலீஸ் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோரிடம் மனு அளித்தனர்.
மேலும் 40க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர். அப்போது ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா கூறும்போது, ரூ. 50 லட்சத்திற்கு மேல் டெண்டர் எடுத்தவர்கள், குறைவான கட்டணம் வசூலித்தால் கட்டுப்படியாகாது என தெரிவித்தனர், எனவே கட்டண உயர்வை மேற்கொண்டோம் என்றார். இதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உடனடி கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் செய்யப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.