என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் பா.ஜ.க.வினர் ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
- பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
- பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார்.
அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதற்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதன்பிறகும் இறுதி ஊர்வலம் நடந்ததால் இன்று கருப்பு தினம் கடைபிடித்து, கோவையில் ஊர்வலம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர். போலீசாரை கண்டித்து கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அனுமதி கேட்டு போலீசாரிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இருந்தாலும் திட்டமிட்டபடி கண்டன ஊர்வலம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்தனர். ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.